madhavan speech in coimbatore

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் பிரவேசம் ஆனார். அவருக்கு அவரது கணவர் மாதவன், துணையாக இருந்து செயல்பட்டார். பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து சென்ற அவர், தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்தார்.

இதையொட்டி புதிய கட்சி தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. அப்போது மாதவன் பேசியதாவது:-

பதவி ஆசையால், நடுராத்திரியில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் ஒன்றும் உத்தமர் கிடையாது. சசிகலா வேறு, ஓ.பன்னீர்செல்வம் வேறு கிடையாது. இருவரும் ஒரே துருவம்தான். அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது.

என் மனைவி தீபா அம்மாவுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களின் ஒரே குறிக்கோள், தீபா அம்மாவை முதலமைச்சராக பதவியில் உட்கார வைக்க வேண்டும். எங்களின் ஒரே எதிர்க்கட்சி தி.மு.க மட்டுமே.

என்னை விலைக்கு வாங்க சிலர் முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. என்னை யாரும் பணத்தால் வாங்க முடியாது. என்னைப் பற்றி தவறான கருத்துகளை கூறிவரும் ஓ.பி.எஸ். மற்றும் திமுகவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு, குறைவானவர்களே கலந்து கொண்டனர். இதனால், அனைத்து இருக்கைகளும் காலியாகவே கிடந்தன.

மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், 'தலைமை' என்ற பதிவில் மாதவன் பெயரோடு தீபாவின் பெயரையும் சேர்த்து, 'மாதவன் தீபா' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.