madhavan pressmeet about deepa
தீபாவை முதலமைச்சராக்குவதே என் முதல் கடமை என தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகள்தான் தீபா. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை எனவும், ஜெயலலிதாவிற்கு கூட இருப்பவர்களே குழி பறிக்கிறார்கள் எனவும் ஏற்கனவே கருத்து தெரிவித்து வந்தார்.
ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது தீபா அவரை பார்க்க வந்தார். ஆனால் யாரையும் அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் அவரையும் திருப்பி அனுப்பியது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தீபா சசிகலா தான் என்னை பார்க்க விடாமல் தடுக்கிறார் என்ற தீப்பொறியை முதன் முதலில் பற்றவைத்து விட்டு சென்றார்.
அதில் இருந்து சசிகலாவுக்கு எதிர்ப்புகள் பலமாக எதிரொலிக்க ஆரம்பித்தன.
பின்னர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் சசிகலாவுக்கு பல இடையூறுகளை அளித்து வந்தார் தீபா.
செய்தி சேனல்களை நேரடியாக தொடர்பு கொண்டு பொறுமையாக பதிலளித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவின் பாணியில் பேசியும் அசத்தினார். இதனால் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே நிலவியது.

ஆனால் இடையே சில நேரங்களில் தீபா ரொம்பவே பொறுமையாக இருந்துவிட்டார் போலும்.
சசிகலாவை எதிர்க்க ஒ.பி.எஸ் முன்வந்தார். இதையொட்டி தீபாவிடம் இருந்த ஆதரவாளர்கள் பெரும்பாலோனோர் ஒ.பி.எஸ் பக்கம் கண்ணை திருப்பினர்.
இருந்தாலும் தீபா விடவில்லை. சசிகலாவுக்கு எதிராக படையெடுக்க வேண்டும் என்ற நோக்கில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஆனால் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவியது.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் ஜெயலலிதா சமாதிக்கு வந்த தீபா கணவர் மாதவன் புது கட்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும், தீபா பேரவையில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல், யாரோ சொல்லி கொடுத்ததை ஒப்பிப்பது போன்று பேட்டியளித்தார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தீபா, சசிகலா தன் கணவரை பிரிக்க பார்க்கிறார் என்று குற்றம் சாட்டினார். யார் எந்த வகையில் அச்சுறுத்தினாலும் என் அரசியல் பயணத்தை தொடர்வேன் எனவும் தீபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தீபாவின் கணவர் மாதவன் மீண்டும் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, தீபாவை முதலமைச்சராக்குவதே என் முதல் கடமை என தெரிவித்துள்ளார்.
மாறி மாறி பேசும் மாதவனை எந்த லிஸ்டில் வைப்பதேன்றே தெரியவில்லை என மக்கள் குழம்புகின்றனர்.
