பிரச்சனைகள் குறித்து எதையிம் தெரிந்து கொள்ளாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதை எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு இனியாவது திருத்திக்கொள்ளவேண்டும் என சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மா.சுப்பிரமணியன், பதிலடி கொடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னையில் நடைபெற்ற மே தின விழா  பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக  ஆட்சியில் தமிழகத்தில், குறிப்பாக சென்னை பெருநகரில் எத்தகைய வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை எனவும், அதிமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதைப் போலவும் ஒரு கற்பனைக் கதையை போகிறப் போக்கில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் என மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


 
திமுக ஆட்சிக்காலத்தில்  சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்கள், தரைப்பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகளை எடுத்துரைத்தால் ஏடுகள் போதாது என தெரிவித்துள்ளார்.
 
மக்களே நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுத்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சென்னை மாநகரில் பத்து மேம்பாலங்கள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, பீட்டர்ஸ் சாலை, பாந்தியன் சாலை, சர்தார் பட்டேல் சாலை உள்ளிட்ட ஒன்பது சாலை சந்திப்புகளில் புதியதாக மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக முன்னாள் மேயர் தெரிவித்துள்ளார்.

சர்தார் பட்டேல் சாலையில் அமைக்கப்பட்ட பாலத்தின் சிறந்த வடிவமைப்பைப் பாராட்டி மும்பையைச் சார்ந்த ‘Indian Institute of Bridge  Engineers’  எனும் நிறுவனம் ‘Best of Bridge’  எனும் சிறந்த பாலத்திற்கான விருது வழங்கியதை  எடப்பாடி பழனிச்சாமி  மறந்து விட்டாரா என மா.சு. கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தகைய செய்திகள் எதையுமே தெளிவாக தெரிந்து கொள்ளாமல், தனக்கு எதிராக செயல்படும் ஓ.பி.எஸ். அணிக்கு பதில் தருவதைப் போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஆதாரமில்லாமல் பொதுமேடையில் பேசும் முதலமைச்சர் பழனிச்சாமி  இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும்  என்று மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.