முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனி அணி தொடங்கினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். இதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னரிடம் ஓ.பி.எஸ். தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

அதில், 122 எம்எல்ஏக்கள், தேர்ந்தடுக்கப்பட்டு, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது. அதனை ரத்து செய்யக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாபா பண்டியராஜன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய கோரிய வழக்கை ஒத்தி வைத்தனர். மேலும், இந்த வழக்கை வரும் செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.