M. Subramanian Pressmeet
பிரதமர் மோடியின் வருகை மனிதர்களுக்கு மட்டுமல்ல வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கருப்பு உடை அணிவோம் என்றும் வீடுகளில் கருப்புக் கொடி காட்டுவோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
இன்று பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. நாகை அருகே சீர்காழியில் காவிரி உரிமை மீட்பு 6-ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின். அப்போது அவர் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்திருந்தார்.
இதேபோல், தமிழகம் முழுவதும் எதிர்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி காட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அப்போது அவர்கள், கருப்பு பலூன்களை பறக்க விட்டும், அதில் Go back Modi என்று எழுதப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், எதிர்கட்சிகளின் போராட்டத்துக்கு பயந்து பிரதமர் மோடி ஆகாயத்தில் பறந்து செல்கிறார் என்று கூறினார்.
சென்னை ஐஐடியில் ஹெலிபேட் அமைக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஐஐடியில் அரிய வகை மான்கள், பறவைகள் உள்ளன. ஐஐடியில் ஹெலிபேட் அமைக்கப்படுவதால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும என்று கூறினார்.
சென்னைவாசிகளுக்கு விடுமுறை என்றால் கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை செல்வார்கள். ஆனால், ஏதேதோ காரணங்களைக் கூறி சிறுவர் பூங்காவையும், பாம்பு பண்ணையும் மூடி வைத்திருக்கிறார்கள். மோடியின் வருகை மனிதர்களுக்கு மட்டுமல்லாது வனவிலங்குகளுக்கும் பாதிப்பு என்று கூறினார்.
மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தால், சென்னை மீண்டும் போராட்டக்களமாக மாறியுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி போராட்டம் நடடத்தப்பட்டு வருகிறது.
