Asianet News TamilAsianet News Tamil

இதை மட்டும் செய்யாதீங்க... பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்..!

மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதல்வர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

M.K.Stalin write a letter to PM Modi
Author
Chennai, First Published Sep 22, 2020, 8:45 PM IST

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக மாநில முதல்வர் தங்களைச் சந்தித்தபோது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. மேகதாது அணைத் திட்டம், 05.02.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும்.

M.K.Stalin write a letter to PM Modi
மேலும், இது விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து உறுதியாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மேகதாது அணைத் திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 M.K.Stalin write a letter to PM Modi
தற்போது இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம் காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதிகளாக உள்ள மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரிசெய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

M.K.Stalin write a letter to PM Modi
மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மிக முக்கியமாக, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாகப் பாதிக்கும். எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதல்வர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது” என்று கடிதத்தில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மு.க. ஸ்டாலின் எழுதிய இந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக எம்.பி.க்கள் இன்று டெல்லியில் வழங்கினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios