திமுக எம்.பிக்களால் மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வர முடியாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு ஆதரவாக பாமன இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் வீரமணி, சி.வி. சண்முகம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள். வேலூர்  நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு தொகுதியில் அன்புமணி வாக்களிடம் ஆதரவு திரட்டிப் பேசினார்.
 “கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பொய்யை மட்டுமே பேசினார். இதை தமிழக மக்கள்  நம்பி வாக்களித்தார்கள். ஆனால் உண்மையை மக்கள் நம்பவில்லை. காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தில் பாலாறு  வழியாகக் தண்ணீர் கொண்டு வர மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் வறட்சி மாவட்டமான வேலூரில் வறட்சி நீங்கிவிடும்.
தற்போது மத்தியிலும் தமிழகத்திலும்  சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக எம்.பிக்களால் மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதேபோல மு.க. ஸ்டாலினால் தமிழகத்தில் எப்போதும் முதல்வராக முடியாது” என்று அன்புமணி பேசினார்.