புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து அவசரம் அவசரமாக ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே விவாதங்கள் இடம்பெறும் வரை பொறுத்திருக்காமல், அவசரம் அவசரமாக, செப்டம்பர் 7-ம் தேதி அன்று ஆளுநர்கள் மாநாட்டைக் கூட்டி, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசுத் தலைவரும், பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோரும், ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்க முனைவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல் என்பதால், அது ஏற்புடையதல்ல!

புதிய தேசியக் கல்விக் கொள்கை வெளியிடுவதற்கு முன், மாநிலக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மத்திய ஆலோசனை வாரியம் (Central Advisory Board of Education) என்ற அமைப்பின் கூட்டத்தில், பாஜக அரசாங்கம் இதுகுறித்து விவாதிக்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்களிடம் கருத்துக்கேட்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மறுதலிப்பதும், நாடாளுமன்றத்தின் பரிமாணங்களைக் குறைப்பதும் ஆகும்.

