22 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் ரிசல்ட்டுக்காக கண் கொத்தி பாம்பாக மே 23ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள்.

தமிழகத்தில் பல கட்சிகள் இருந்தாலும் இதில் லாப நட்ட்டம் அடையப்போவது அதிமுக, திமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே. ஆறு தொகுதிகளில் வென்றால் அதிமுக ஆட்சி. 20 தொகுதிகளில் வென்றால் திமுக ஆட்சி. அமமுக சில தொகுதிகளை வென்றால் ஆட்சி அமைக்க துருப்புச் சீட்டாக அமையும். 

இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சன்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுக ஆட்சி அமைக்க உள்ள சாத்தியக் கூறுகளை அடுக்கினார் மு.க.ஸ்டாலின். இது குறித்து பேசிய அவர், ‘’கடந்த 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி. அதேபோல் இங்கு நடக்கும் எடப்பாடி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 

18 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறித்ததால்தான் இடைத்தேர்தல் வந்தது. தற்போது நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 18 தொகுதியில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாது என உளவுத்துறை கூறியுள்ளது. தற்போது நடக்கும் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் மே 23ம்தேதி வாக்குகளை எண்ணும் போது நாம்தான் வெற்றி பெற போகிறோம். 

தற்போது நம்முடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சேர்த்து 97 பேர் உள்ளோம். இந்த 22 தொகுதிகளிலும் வெற்றி பெறும் போது நமது எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து விடும். ஆட்சியை பறி கொடுத்து விடுவோம் என அதிமுக பயந்து தற்போது 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்காகத்தான் நாம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து அவர்களுக்கு செக் வைத்துள்ளோம். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்’’ என அவர் கூறினார். 

அவர் மட்டுமல்ல. டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களும் தங்களது தலைவர் மே-29ம் தேதி முதல்வராக பதவி ஏற்பார் என உற்சாகமாகி வருகின்றனர். எத்தனை பேர் கணக்குப்போட்டாலும் மே-23ல் தான் விடைகிடைக்கும்.