இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலத்திற்கான 50 சதவீத இடங்களில் உள்ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களுக்கான தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களின் உரிமையை உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மூலம் நிலை நிறுத்தியதாக” முதல்வர் பழனிசாமி ஓர் அறிக்கையை நேற்றைய தினம் (1.9.2020) வெளியிட்டு, திமுக சாதனைகளுக்கு உரிமை கொண்டாட முனைந்திருப்பது நல்ல வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது. ஒருவேளை முதல்வருக்கு இந்த உள்ஒதுக்கீட்டின் வரலாறு தெரியவில்லை போலிருக்கிறது.
அறிக்கை எழுதிக் கொடுத்த அதிகாரிகளாவது அதை ஆரம்பம் முதல் விளக்கியிருக்க வேண்டும். அவர்களுக்கும் தெரிவிக்க மனமில்லையா எனத் தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு இந்த 50 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கியதே திமுக ஆட்சிதான். அதனால்தான் இந்தத் தீர்ப்பு வெளிவந்த உடனேயே, “அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவக் கல்வியில் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகையும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது” என்று எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அதன் பிறகு கூட இதற்கு முழுக்க முழுக்க அதிமுக அரசுதான் காரணம், அதுவும் தன் தலைமையிலான அரசுதான் காரணம் என்று ஓர் அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருப்பதால் - அரசு மருத்துவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது யார் - எந்த ஆட்சி என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


கருணாநிதி மூன்றாவது முறையாக முதல்வரானபோது, முதன்முதலில் 1989-ல் அரசு மருத்துவர்களுக்கு இந்த 50 சதவீத உள் ஒதுக்கீடை வழங்கினார். நான்காவது முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்த உள் ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் அரசு மருத்துவர்களுக்கான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டார். திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அந்த அரசாணை எண்: 55 தேதி: 9.2.1999. கருணாநிதி வெளியிட்ட இந்த அரசாணை மற்றும் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில், கருணாநிதி தலைமையிலான அரசு முனைப்புடன் வாதிட்டு, உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வில் அரசு மருத்துவர்களின் உள் இடஒதுக்கீட்டு உரிமையை நிலை நாட்டியது.
பிறகு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், உச்சநீதிமன்றம் முன்பு வலுவான வாதங்களை, ஆதாரங்களை, மாநில அரசின் அதிகாரத்தினை எடுத்து வைத்து - “கே. துரைசாமி vs தமிழக அரசு” என்ற வழக்கில் 23.1.2001 அன்றே இந்த உரிமையை நிலைநாட்டி; அப்போதே இந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தது திமுக அரசு. அது மட்டுமின்றி; இந்த உள் இடஒதுக்கீட்டில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்து நீதியரசர் ஆர்.சி.லகோத்தி, நீதியரசர் துரைசாமி ராஜூ ஆகியோர் அடங்கிய அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளதை அரசு மருத்துவர்களும் அறிவர்; இதுவரை பயன்பெற்று, படித்துப் பணியில் இருப்போரும், ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களும் நன்கு அறிவர்.


ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி, “கிராமங்கள், மலைப் பகுதிகள், மிகுந்த சிரமமான பகுதிகள்” ஆகியவற்றில் மக்களுக்குச் சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கு “வெயிட்டேஜ் மதிப்பெண்கள்” அளித்து ஓர் அரசாணை பிறப்பித்தார். தனது ஆட்சிக் காலம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமின்றி - தமிழக அரசின் மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர் கருணாநிதி. அவர் தலைமையிலான திமுக ஆட்சி என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தற்போது உச்சநீதிமன்றம் 31.8.2020 அன்று அளித்துள்ள 242 பக்கம் அடங்கிய தீர்ப்பில்; திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ள உள்ஒதுக்கீடு - சலுகைகள் - வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி; உச்சநீதிமன்றத்தில் கழக அரசு திறமையாக நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக வெளிவந்த  'கே.துரைசாமி' வழக்குத் தீர்ப்பையும் விரிவாக மேற்கோள் காட்டி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது என்பதை ஏனோ முதல்வர் தெரிந்து கொள்ளக் கவனம் செலுத்தவில்லை என்றே கருதுகிறேன்.


திமுக ஆட்சியில் கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்திட, மலைவாழ் மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கிட, ஒட்டுமொத்தமாகத் தமிழக அரசு மருத்துவமனைகளில் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக; அரசு மருத்துவர்களுக்கு வழங்கிய கல்வியுரிமையை அன்றும் 'கே.துரைசாமி' வழக்கில் உச்சநீதிமன்றம் நிலைநாட்டியது; இன்றும் அதே அடிப்படையில் நிலைநாட்டியிருக்கிறது. “அரசு மருத்துவர்கள் திறமையானவர்கள் அல்ல” என்ற சொத்தையான வாதத்தை, அனைவரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்து, அரசு மருத்துவர்களுக்கான இந்த உள் ஒதுக்கீட்டைத் தடுக்க முனைந்ததை அடியோடு நிராகரித்து, இதுபோன்ற உள் ஒதுக்கீடுகளில் தலையிட இந்திய மருத்துவக் கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்ற தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கே உள்ஒதுக்கீடு வழங்கிட அதிகாரம் உள்ளது என்றும் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொருத்தமான அங்கீகாரம் என்று மகிழ்ச்சியடையும் அதே வேளையில்; இந்தத் தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது - அரசு மருத்துவர்களின் உரிமை பாதிக்கப்படாமல், மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வந்தது, திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.