அண்மையில் மரணமடைந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுகுமாறன், கந்தர்வகோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. மாரியய்யா ஆகியோரின் உருவப்படங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து அவர்களுடைய புகழாஞ்சலி செய்தார்.  பின்னர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும்போது, “கொரோனாவுக்கு நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகனை நாம் இழந்துள்ளோம். இன்னும் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொரோனா காலத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.


‘மக்களே தங்களைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்கிற நிலையில்தான் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளன. கொரோனா வேகமாகப் பரவி வருகிறது, மக்கள் இறக்கிறார்கள் என்பதை பிரதமரும், தமிழக முதல்வரும் மறந்துவிட்டனர். அவர்கள் வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள். மக்கள்தான் கொரோனாவோடு யுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும்  மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. மருத்துவர்களின் மரணங்களேகூட மறைக்கப்படுகின்றன. ஊழல்களை மறைக்கும் அரசாகவும் மக்களின் மரணங்களை மறைக்கும் அரசாகவும் அதிமுக அரசு செயல்படுகிறது.
கொரோனா மட்டுமல்ல, இந்த ஆட்சியும் எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே உடல்நலம், கட்சி பணி, மக்கள் சேவை ஆகிய மூன்றையும் அனைவரும் சரிவர கடைபிடிக்க வேண்டும். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. அந்தப் பெரும்பணிக்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.