Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியாரை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதையில்லை... அமைச்சர் ஜெயகுமார் கடும் தாக்கு..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

M K Stalin not talking to Edappadiyar
Author
Tamil Nadu, First Published Jun 18, 2019, 6:01 PM IST

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுடெல்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் தேவைகள் பற்றியும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டியதின் அவசியத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்து இருக்கிறார்.

M K Stalin not talking to Edappadiyar

பிரதமர் தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்களும் அனைத்து மாநில முதல்வர்களும் பங்குபெற்று உரையாற்றிய இந்த நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக உரையாற்றியுள்ளார். நிதி அயோக் கூட்டத்திற்கு முன் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடித் தேவைகளை 29 தலைப்புகளில் தொகுத்து கோரிக்கை மனு ஒன்றையும் முதல்வர் அளித்திருக்கிறார்.

நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அவற்றில் எதையுமே படித்துப் பார்க்கவும் இன்றி மு.க.ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்க வீண் அவதூறு பரப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்க காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே உண்மை.

M K Stalin not talking to Edappadiyar

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், விவசாயப் பெருமக்களுக்கு அறுவடைக்குப் பின் பதப்படுத்தி விற்பனை செய்யும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை தமிழ்நாட்டில் நிறுவிடவும், சென்னையின் குடிநீர் தேவைக்காக பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்கவும், பொது விநியோகத் திட்டத்திற்காக மானிய விலையில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

இதுமட்டுமல்லாமல் முதல்வர், புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம், நடந்தாய் வாழி காவிரி சீரமைப்புத் திட்டம், காவிரி வடிநில புனரமைப்புத் திட்டம், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கும் திட்டம் போன்றவற்றினை விரைந்து செயல்படுத்த முதல்வர் தனது சந்திப்புகளின்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

இத்தனை கோரிக்கைகளையும், அவற்றில் உள்ள நியாயங்களையும், அவற்றின் அவசியத் தேவைகளையும் பிரதமரிடமும், மத்திய அமைச்சர்களிடமும் முதல்வர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவன செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உண்மைகளை எல்லாம் மூடி மறைத்து தனது திமுக கட்சியின் நிர்வாகிகள் நாகர்கோவிலில் நடத்திய அராஜகத்தையும், சட்டத்தை மீறிய செயல்களையும் மக்கள் பார்வையில் இருந்து மறைத்துவிடும் நோக்கத்திலும், சிங்கப்பூர் செல்லும் அவசரத்திலும் முதல்வரின் முயற்சிகளைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொள்ளாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.

மேலும், மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக 50 ஆண்டுகாலம் போராடி அண்மையில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் பேசினார்.M K Stalin not talking to Edappadiyar

இதை இதுநாள்வரை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடும் முதல்வரைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை. மு.க.ஸ்டாலின் 5 ஆண்டு காலம் சென்னை மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராக 5 ஆண்டு காலமும் இருந்தபோது நிறைவேற்ற முடியாத மக்களுக்கான திட்டங்களையெல்லாம் தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது.

இதையெல்லாம் பொறுக்கமுடியாத மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வேண்டுமென்றே ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அரசு மீது சுமத்தி வருகிறார். நிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையையும், பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணத்தையும், மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் நிதானமாகப் படித்துப் பார்த்து தெளிவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios