நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தோற்றால்..? மாவட்ட செயலாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அப்படி தோல்வி அடையும் தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தளர்வு.?
திமுக மாவட்ட செயலாளர், தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் மற்றும் 234 தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட செயலாளர்களிடம் தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். மேலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது மாவட்ட செயலாளர்கள் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் உள்ள விதிமுறைகளில் ஒரு சில தளர்வுகளை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.
தேர்தலில் 40க்கு 40 வெற்றி
இதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏற்கனவே தொடங்கி இருப்பீர்கள். இன்னும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற தேர்தலை விட இந்த தேர்தல் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே கடுமையாக உழைத்து 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்பதை பல மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக செய்து வந்தாலும், சென்னையைச் சேர்ந்த சில மாவட்ட செயலாளர்கள், கன்னியாகுமரி,ஈரோடு மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் இந்த விஷயத்தில் மிக மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறீர்கள் இது நல்லதல்ல என்று கடுமையாக சாடி உள்ளார். மேலும் 7 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும். திமுகவின் தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாராவது வேட்பாளர் தோல்வி அடைந்தால் அந்த மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவீர்கள்.
தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவீர்கள். கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படியுங்கள்
காவிரி பிரச்சினையில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் திமுக அரசு.! விளாசும் எடப்பாடி பழனிச்சாமி