திமுக சார்பில் கோவையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். “இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் போடும் திட்டங்கள் எல்லாமே அரசு கஜானாவை எடுத்து தங்கள் வீட்டு கஜானாவுக்கு கொண்டு போகும் திட்டங்களாகவே போடுகிறார்கள். அதனால்தான் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி இல்லை. சிறு, குறு தொழில்கள் எல்லாமே நசிந்துவிட்டன. தொழில் வளர்ச்சி எப்போது ஏற்படும் என்றால், அந்த மாநில அரசு முதலில் வலிமையானதாக இருக்க வேண்டும். குழப்பம் இல்லாததாக இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முதல்வர் இருப்பவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

 
எந்த இலக்கணமும் இல்லாத ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. கடந்த நான்கு ஆண்டு காலமாக உட்கட்சிக் குழப்பத்தில் இருக்கிற ஒரு ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்யவேமாட்டார்கள். அதிமுக ஆட்சியில் இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். இரண்டு மாநாடுகளின் மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது என்று கேட்டேன். இதுவரை ஒரு தகவலும் இல்லை. முதலீடுகள் வந்தால் தானே சொல்வார்கள்! முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்றார். துணை முதல்வர் வெளிநாட்டுக்குச் சென்றார். அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றார்கள். எங்கிருந்து, எவ்வளவு முதலீட்டைக் கொண்டு வந்தார்கள்? ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கமிஷன், கலெக்சன், கரெப்ஷன் என முப்பெரும் கொள்கையை மட்டுமே வைத்திருக்கும் அதிமுக ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். அதுவே உண்மை.


அதிமுக என்ற கொள்ளைக்கார ஆட்சிக்கு தலைமை தாங்க யார் தகுதியானவர் என்ற சண்டை அண்மையில் அந்தக் கட்சியில் நடந்தது. கொள்ளையர்களின் அரசர் எடப்பாடி பழனிசாமிதான் எல்லா அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து விட்டார்கள். இன்னும் ஆறு மாதம் இருக்கிறது அல்லவா? அதற்குள் தமிழ்நாட்டை மொட்டையடித்திட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்த பொய்யாட்சிக்கு, பொல்லாத ஆட்சிக்கு, மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அடுத்து அமைய உள்ளது திமுக ஆட்சிதான். அது அண்ணாவின் ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. சாதாரண, சாமானிய, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணீர் துடைக்கும் ஆட்சியாக அது அமையும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.