விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளி மத்திய பாஜக அரசு, லோக் சபாவிலும் ராஜ்ஜிய சபாவிலும் 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாவை எதிர்த்து ஆளும் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் அமைச்ச்சர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


அதில், “மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்ற அடிப்படையில், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. கேரள அரசு, மாநில உரிமைகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்திடப் பாடுபடும் அரசு; வேளாண் சட்டங்களில் பொதிந்துள்ள விபரீதத்தை விளங்கிக் கொண்டுள்ள அரசு.


இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே!? எடப்பாடி அரசு - அது மாநில உரிமைகளைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலனைத் தவிர, வேறு எதுகுறித்தும் சுரணை இல்லாத அரசு; விவசாயிகளைப் பற்றியோ, வேளாண் சட்டங்களினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ, துளியும் கவலைப்படத் துப்பில்லாத அரசு!” என அதில் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.