திமுக பொதுச் செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த துரைமுருகனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் மறைவுக்கு பிறகு திமுகவில் தனக்கு நம்பகமானவர்கள் தன்னுடன் வைத்துக் கொண்டு மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையான பதவிகளை கொடுத்து ஒதுக்கும் பணியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தான் கே.என்.நேருவுக்கு திடீரென தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் போன்றோர்களை தனக்கு அருகில் ஸ்டாலின் வைத்துக் கொண்டார். இதற்கிடையே டி.ஆர்.பாலு ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த நிலையில் தனி ராஜியம் அமைக்க முயன்றதால் பதவி பறிப்புக்கு ஆளானார்.

பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் அந்த பதவிக்கு குறி வைத்தனர். அதிலும் துரைமுருகன் எப்படியாவது பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மூத்த நிர்வாகி மற்றும் நம்பிக்கைக்கு உரியவர் என்கிற அடிப்படையில் துரைமுருகனை பொதுச் செயலாளர் ஆக்க ஸ்டாலினும் முடிவு செய்தார். இதற்காக பொதுக்குழு கூட்டப்பட்டது. துரைமுருகன் தனது பொருளார் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் கொரோனாவை காரணம் காட்டி பொதுக்குழுவை ஸ்டாலின் ஒத்திவைத்தார். இதனால் பொருளாளர் உள்ளிட்ட எந்த பதவியிலும் இல்லாமல் துரைமுருகன் செயல்பட்டு வந்தார். இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆ.ராசா வேகமாக காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. தலித் ஒருவரை உயர் பதவியில் வைக்க வேண்டும் என்கிற லாபியும் திமுகவில் அதிகமாகியுள்ளது.இதனை பயன்படுத்திக் கொள்ள ஆ.ராசா தரப்பும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள். அதே போல் திமுக பொருளாளர் பதவி மீது எவ வேலுவுக்கு நீண்ட நாள் ஆசை உண்டு. அதே போல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டி.ஆர்.பாலுவும் திமுக பொருளாளர் பதவியை குறி வைத்துள்ளார். இப்படி பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியை மையமாக வைத்து திமுகவில் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவாக செயல்பட ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.இதற்கிடையே ஆர்.எஸ்.பாரதியும் பொருளாளர் பதவிக்கு ஆசைப்படுவதாக கூறுகிறார்கள். இப்படி இரண்டு பதவிகளுக்கு போட்டி அதிகமாகியுள்ளதால் தற்போதைக்கு யாருக்கும் எந்த பதவியையும் கொடுக்க வேண்டாம் அவரவர் அவர்களின் பழைய பதவியில் நீடிக்கட்டும் என்று முடிவெடுத்துவிட்டாராம் ஸ்டாலின்.