திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அமுகிரி. ஆனால் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தார். அவரது உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் வந்து கருணாநிதியின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், மறைந்த தனது தந்தையின் சமாதிக்கு வந்து என மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன் என தெரிவித்தார். தான் தன் தந்தையிடம் கேட்டுக் கொண்டது பின்னர் தெரியவரும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , தற்போது திமுக தொண்டர்கள் அனைவரும் என பக்கம்தான் இருக்கிறார்கள் என அதிரடியாக தெரிவித்தார்.

தான் இப்போது திமுகவில் இல்லாததால் நாளை நடைபெறயுள்ள செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஆனால் போகப் போகத் தான் என் திட்டம் என்னவென்று தெரியும் என அழகிரி அதிரடி காட்டினார்.

அழகிரியின் இந்தப் பேட்டி திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை இறக்கும் வரை அடக்கி வாசித்த மு.க.அழகிரி தற்போது முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது அவரது ஆதவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.