தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பொம்மைகளை தொட்டுக்கும்பிட்டு அமைச்சர் பெஞ்சமின் வாங்கி சென்றார். நாளை முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. கோயில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு வழிபாடுகள் நாளை முதல் நடத்தப்படுகிறது. இதற்காக கொலு பொம்மைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில், அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர்கோட்டம் அருகில் கொலு விற்பனை கண்காட்சி இன்று தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். இன்று துவங்கிய கொலு விற்பனை கண்காட்சி நவம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த கொலு பொம்மை விற்பனை கண்காட்சியில் பல்வேறு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கொலுவை திறந்து வைத்த அமைச்சர் பெஞ்சமின், கண்காட்சியை பார்த்து ரசித்தார்.

அப்போது அங்கு இடம் பெற்றிருந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளை பார்த்து வியந்து போனார். பின்னர் அந்த சிலைகளை ரூ.1000 கொடுத்து வாங்கிக் கொண்டார். கொலு பொம்மையாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை தொட்டுக் கும்பிட்டு, சிலைகளைப் வாங்கி சென்றார் அமைச்சர் பெஞ்சமின்.'