தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக லைக்கா நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கை வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய வீடுகளை வழங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்த கொள்ள இருந்தார்...

ஆனால் இலங்கை சென்று தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம் என்று விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை ,உள்ளிட்ட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,  

நான் அரசியல்வாதி அல்ல என்றும் மக்களை மகிழ்விக்கும் கலைஞன் என்றும் தெரிவித்திருந்தார்.  இலங்கை சென்றிருந்தால் அந்நாட்டு அதிபரை சந்தித்து தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச இருந்ததாக குறிபிட்டிருந்த ரஜினிகாந்த்,

இதுபோன்தொரு வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்பட்டால், அதனை அரசியல் ஆக்கி என்ன தடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிடையே ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

லைக்கா நிறுவனம் கண்டனம்

"தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர். தொழில் போட்டியாளர்களும் கட்டுக்கதைகளை பரப்பினர்.

அரசியல்வாதிகளும் வதந்திகளை பரப்புவதாக சந்தேகம் உள்ளது.இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை."

அரசியல் உள்நோக்கமில்லை

"எங்களது திட்டத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம்.ரஜினியின் வருகையின் போது மேலும் பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அரசியல் தலைவர்களுக்கு பாராட்டு.

இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட அனைவரும் பாடுபட வேண்டும்.திட்டமிட்டபடி ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்." இவ்வாறு லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.