உ.பி அரசு இயற்றியுள்ள லவ் ஜிஹாத் சட்டத்தை நீக்க நீதித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: 

சிவில் உரிமை அமைப்புகள் அஞ்சியது போல, உத்தரப்பிரதேசத்தின் 'லவ் ஜிஹாத்' சட்டம் முஸ்லிம் விரோத யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தால் கலப்பு திருமண தம்பதிகள், மதம் மாறுகின்றவர்கள் மற்றும் அப்பாவி முஸ்லிம்களை துன்புறுத்துவதற்கான வழிமுறையாக மாற்றப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கை துணையை, தனது மதத்தை தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமைகள் உத்தரபிரதேசத்தில் இச்சட்டத்தால் திடீரென குற்றமாக மாறியுள்ளன. 

கடந்த வாரங்களில் குறிப்பாக இந்து இளம் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் ஆண்கள் உ.பி காவல்துறையால் குறி வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் ஆண் ஒருவரை திருமணம் செய்ததற்காக ஒரு இந்து பெண் அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு இஸ்லாமிய வெறுப்பு மனநிலை கொண்டவர்களால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதை காரணமாக அப்பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக வெளிவரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சனாதன ஆணாதிக்க முறையை பெண்கள் மீது திணிக்க இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த பெண் விரோத சட்டத்தால் தந்திரமாக பறிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கமே பெண்களின் உரிமைகளை பறிக்க அதிகாரத்தை வழங்கும் இந்த சட்டத்திற்கு எதிராக எந்தவொரு பெண்ணியவாதியும் பெரிய அளவில் எதிர்ப்பை தெரிவிக்காதது ஆச்சரியத்தை அளிக்கிறது. மற்ற பா.ஜ.க ஆளும் அரசுகளும் இதே போன்ற சட்டத்தை இயற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றன.இந்தியாவின் உயர் நீதித்துறை இந்த நிலைமையை புரிந்து கொண்டு இஸ்லாமிய வெறுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நீக்க வழிவகை செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.