வருகிற மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பொருத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார். 

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. தேர்தல் ஆணையம் இதை திட்டவட்டமாக மறுத்து வந்தது. இந்நிலையில் இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகைச்சீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாக்யராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த மனுவில் வருகின்ற மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலான ஒப்புகைச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அனைத்து வாக்களர்களும் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒப்புகைச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் மனுவில் கூறியிருந்தார்.  

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரத்தை, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்று, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

 

முன்னதாக தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது ஒப்புகைச்சீட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நேற்று தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் மனு கொடுத்திருந்தன. இந்நிலையில் ஒப்புகைச் சீட்டு 100 சதவீதம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.