நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட்டு கேட்டு அதிமுக தலைவர்களின் மகன்கள் போட்டா போட்டி கொண்டு விருப்ப மனுக்களை பெற்றனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன், துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, அமைச்சர்களின் மகன், அண்ணன், தம்பிகளை எம்பி தேர்தலில் களம் இறக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுகவில் புதிய குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை. ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வர் பதவிக்கு வரலாம் என இபிஎஸ், ஓபிஎஸ் மேடை தொடரும் பேசி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அனைத்தும் அதிமுகவில் தற்போது தலைகீழாக மாறியுள்ளது என தொண்டர்கள் குமுறுகின்றனர். 

வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் நேற்று முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை சென்னையில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு போட்டி போட்டு விருப்ப மனு வாங்கி செல்கின்றனர். 
 
இதில் முக்கியமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரகுமார் எம்பி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கி உள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் பெயரில் விருப்ப மனு வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று தொழில்துறை அமைச்சரும் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.சி.சம்பத் மகனுக்கும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணனுக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன் மீண்டும் சென்னையில் எம்பி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கியுள்ளார்.

 

இப்படி, அதிமுகவின் மூத்த அமைச்சர்களின் வாரிசுகள் மற்றும் முன்னணி தலைவர்களின் உறவினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கியுள்ளது தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது எம்பி, எம்எல்ஏ தேர்தலில் வாரிசுகளுக்கு போட்டியிட எப்போதும் வாய்ப்பு அளிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.