தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட டிடிவி.தினகரன் வாய்ப்பு வழங்கியுள்ளார். 

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரு கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். அவற்றின் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இன்று வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். 

அதேபோல் அமமுக சார்பில் முதற்கட்டமாக 24 பேர் கொண்ட வேட்பாளர் மற்றும் 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 14 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும், 9 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ளார். 

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் தர்மபுரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தேனி தொகுதிக்கு தங்க தமிழ்ச்செல்வன், அரக்கோணம் தொகுதிக்கு பார்த்திபன் களமிறங்க உள்ளார்.  தேனி மக்களவை தொகுதியில் அதிமுகவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.

இதனால், இந்த தொகுதி அமமுக சார்பில் அரசு பலத்துடன் களமிறங்க வேண்டும் என டிடிவி.தினகரன் தீர்மானித்திருந்தார். ஆகையால் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டு உள்ளார். டிடிவி தினகரன் பல்வேறு திட்டங்களோடு தங்க தமிழ்ச்செல்வனை இங்கு களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தருமபுரியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார்.

அதேபோல் அரக்கோணத்தில் திமுகவில் ஜெகத்ரட்சகன், பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி இருவரையும் எதிர்த்து பார்த்திபன் களமிறங்க உள்ளார். இதனால் அரசியல் களத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.