மத்திய அமைச்சரகளை எம்.பிக்கள் சந்திக்கவில்லை என்றாலும் மக்கள் குறை கூறுகிறார்கள் மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் குறை கூறுகிறார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

நீண்ட நாள் இழுத்தடிப்புக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. இதனால் டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்து அவரின் உத்தரவுக்காக புதுச்சேரியில் காத்திருக்கின்றனர். 

ஆனால் இதுவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இதனிடையே எதிர்கட்சிகளும் எடப்பாடியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் இணைந்து பிரமாண பத்திரங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், தங்கமணி மற்றும் எம்.பிக்கள் தம்பிதுரை, மைத்ரேயன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். 

இதைதொடர்ந்து நேற்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து பேசினர். இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், தமிழகத்திற்கான நிதியை வழங்கக்கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேலும், மத்திய அமைச்சரகளை எம்.பிக்கள் சந்திக்கவில்லை என்றாலும் மக்கள் குறை கூறுகிறார்கள் மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாலும் குறை கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.