காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எஞ்சியுள்ள 2 நாட்கள் மட்டுமின்றி அடுத்த கூட்டத்தொடரையும் முடக்குவோம் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இன்று நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது 

இந்த நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண் வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் வன்முறைக்கு வராமல் இருக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் தவறொன்றும் இருப்பதாக தான் கருதவில்லை என்றார். 

டெல்லியிலும், தமிழகத்திலும் சாத்வீக முறையில் போராடி வருகிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எஞ்சியுள்ள 2 நாட்களும் போராட்டம் நடைபெறும் என்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடரிலும் போராட்டம் தொடரும் என்றார். போராட்டம் ஒரே நாளில் முடிவடையாது; ஒரு வருடம் கூட நடந்துள்ளது. வன்முறையில் ஈடுபடாமல் போராட வேண்டும் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. வாரியத்தை அமைக்கும் வரை மத்திய அரசை வலியுறுத்தி எங்களுடைய போராட்டம் தொடரும் என்றார். 

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என்ற எம்.பி. தம்பிதுரை, கர்நாடக தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றால், அதன் பிறகு நடக்காதா? என்று கேள்வி எழுப்பினார். 

1974 ஆம் ஆண்டு முதல் மத்தியில் உள்ள எந்த அரசும் தமிழகத்துக்கு செவிசாய்க்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவும் செயல்படுத்தவில்லை, மத்திய அரசும் செயல்படுத்தவில்லை என்று தம்பிதுரை எம்.பி. கூறினார்.