வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தமிழகத்தை வாட்டி வதைத்து வரும் நிலையில் நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தமிழக வேளாண்துறை  வெட்டுக்கிளிகள் தமிழகம் வரை வர வாய்ப்பு மிக குறைவு என கூறியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும்  ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று நேஷனல் ஜியாக்ரபிக்,  இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது? 

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது,  ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர் இடபெயர்வு (migration),பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது.ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் இடப்பெயர்வை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம்.  ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. 

மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் சுல்தான் அவர்கள்,  தமிழக அரசும் , விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார். இந்நிலையில்  இது குறித்து தெரிவித்துள்ள தமிழக வேளாண்துறை,  இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வந்ததில்லை ,  ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு ,  ஆனாலும் வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே வெட்டுக்கிளி படையெடுப்பால் கென்யா சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐநா சபை இந்தியாவை நோக்கி வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று  எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.