மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முதலாளி மனப்பான்மையில் பேசாமல் சக ஊழியரைப் போல் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கு மார்ச் 25-ம் தேதி கொண்டுவரப்பட்டு 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 3வது கட்ட ஊரடங்கு வரும் 17-ம் தேதி முடிகிறது. இந்நிலையில் காணொலி  மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி;- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அளவைப் பொருத்து சிவப்பு, ஆரங்சு மற்றும் பச்சை மண்டலங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்கள் குறித்து அந்தந்த மாவட்டங்கள் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் இப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொருத்து வரையறுக்கப்பட வேண்டும். 

பிரதமர் அலுவலகம் மட்டுமே முடிவெடுத்துக் கொண்டிருந்தால் நாம் இழப்பை சந்திப்போம். பிரதமர் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். அதிகார குவிப்பு பேராபத்தை ஏற்படுத்தும். பிரதமர் முதல்வர்களை நம்ப வேண்டும். முதல்வர்கள் மாவட்ட ஆட்சியர்களை நம்ப வேண்டும். மே 17-க்கு பிறகு ஊரடங்கை தளர்த்தவோ அல்லது தொடரவோ என்ன மாதிரி யுக்திகளை பயன்படுத்த உள்ளோம் என்பதை மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளிடையே வெளிப்படைத் தன்மையும், ஒத்துழைப்பும் தேவை. ஊரடங்கு என்பது கொரோனாவுக்கான ஆன் - ஆப் ஸ்விட்ச் கிடையாது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ள வயதானவர்களுக்கு மட்டுமே இது ஆபத்தான நோயாக உள்ளது. மற்றவர்களுக்கு இது ஆபத்தானது கிடையாது. இந்த உளவியல் மாற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்கள் மிகவும் பயத்தில் உள்ளனர். ஊரடங்கை திறக்கும் போது இப்பயத்தை நம்பிக்கையாக மாற்ற வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.