தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளான நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று கூறினார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 

சமீபத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.