உள்ளாட்சி தேர்தலை ஆகஸ்டு மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், வார்டு வரையறை செய்யப்பட்டதில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும். தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு 2016-ல் மீண்டும் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

ஆனால் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை முறையாக ஒதுக்கவில்லை என்று ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகு இடஒதுக்கீடு முறையை சரி செய்த மாநில தேர்தல் ஆணையம், உடனே தேர்தலை நடத்தவில்லை. மாறாக வார்டுகளை மறுவரையறை செய்து மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளை பிரிப்பதாக காரணம் கூறினர். இந்த பணிகள் முடிந்ததும் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டுகளை கண்டறிந்து பிரிக்கும் பணி நடைபெறுவதாக அறிவித்தனர்.

இதன்பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த போவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார். பின்னர் இந்த சட்டத்தை காரணம் காட்டி வார்டுகள் பிரிக்கும் பணி நடைபெறுவதாக காரணம் கூறப்பட்டது. இப்படி கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்தனர்.

இதன் காரணமாக மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வராமலேயே உள்ளது. இதனால் வளர்ச்சி பணிகளை முழுமையாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் தனி அதிகாரிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இப்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் அந்த வாக்காளர் பட்டியலை மையமாக வைத்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலைபிரித்து அதன் பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் இதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் நீதிமன்றம் சென்று தடை வாங்கவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.