2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து 4 தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை நெருங்கவிடாமல் வெற்றியை வாகையை அதிமுகவுக்கு பெற்றுக்கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், 2016-இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற தடுமாறிக்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வெற்றியைக் காண முடியாமல் அதிமுகவின் தோல்விகள் தொடர்கின்றன. 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. எதிர்பார்த்ததுபோல திமுக கூட்டணி வெற்றிருக்கிறது என்று சொல்லும் வேளையில், எதிர்பார்க்காத அளவுக்கு அதிமுக தோல்வி அடைந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகள், 89 நகராட்சிகள், 285 பேரூராட்சிகள், 566 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 3,727 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றி எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டியது. 10 ஆண்டுகள் கழித்து நடைபெற்றுள்ள தேர்தலில் 21 மா நகராட்சிகளில் உள்ள 1,374 வார்டுகளில் 161, 3,843 நகராட்சிகள் வார்டுகளில் 638, 7,621 பேரூராட்சி வார்டுகளில் 1,206 வார்டுகளை மட்டுமே அதிமுகவால் கைப்பற்ற முடிந்துள்ளது. குறிப்பாக 21 மாநகராட்சிகளில் ஒரு மேயர் பதவியைக்கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை.

2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்து 4 தேர்தல்களில் எதிர்க்கட்சிகளை நெருங்கவிடாமல் வெற்றியை வாகையை அதிமுகவுக்கு பெற்றுக்கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், 2016-இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற தடுமாறிக்கொண்டிருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றியைப் பெற்றது. ஓரிடத்தில் மட்டுமே அதிமுக வென்றது. அதே ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 214 மாவட்ட ஊராட்சி கவுன்சிலையும், 1,792 ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களையும் அதிமுக வென்றது. ஆனால், ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவைவிட எதிர்க்கட்சியாக இருந்த திமுக இடங்களில் வென்றது. அதாவது, 244 மாவட்ட கவுன்சிலர்கள், 2,095 ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களையும் திமுக வென்றது.

அதைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 75 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வென்றது. அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்று ஆட்சியை இழந்தது. பின்னர் அதே ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலை மட்டுமே அதிமுக வென்றது. ஆனால், திமுக 139 கவுன்சில்களை வென்றது. இப்படி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கடந்த 5 ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. அதிமுகவின் இந்தச் சரிவுக்கு சசிகலா விவகாரம், டிடிவி தினகரனின் தனிக்கட்சி, இரட்டைத் தலைமை, பலம் வாய்ந்த தலைமையாக இல்லாதது, கோஷ்டி பூசல் என பல காரணங்கள் உள்ளன. பாஜகவுடன் கூட்டணி காரணமாக சொல்லப்பட்டு வந்தன. ஆனால், இந்தத் தேர்தலில் கூட்டணி இல்லையென்ற நிலையில் அதிமுக தோல்வியடைந்துள்ளது.

தொடர் தோல்விகளுக்குப் பிறகும் சரி செய்யவோ புது ரத்தம் பாய்ச்சவோ இப்போதைய தலைமை கண்டுகொள்ளவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு ஊரின் உள்விவகாரங்களைச் சொல்லாமல் நீட் தேர்வு விவகாரம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொங்கல் பரிசில் ஊழல், ஒரே நாடு ஒரே தேர்தல் என பொதுப் பிரச்சினைகளை மட்டுமே பேசிக்கொண்டிருந்தது. இப்படி சொதப்புவதால், அதிமுக மீது மக்களின் பார்வை படாமலேயே போய்விட்டது என்றும் சொல்லலாம். அதிமுகவின் தொடர் தோல்விகள் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது கட்சியின் நிலைமையைச் சரிசெய்யாவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் அதிமுகவுக்கு காணல் நீராகப் போய்விடலாம்.