உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி..! நெருங்கும் பாமக – திமுக..! ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு ஒப்புதல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிவிக்கையே வெளியிட்டார். இதனை தொடர்ந்து பாமக எம்எல்ஏக்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தனர். இந்த நிலையில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் வட மாவட்ட வன்னியர்களை குறி வைத்து மேற்கொள்ளப்படுவது அரசியல் ரீதியான பல்வேறு மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என்கிறார்கள்.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பிற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு பத்து புள்ளி ஐந்து சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கியது கடந்த அதிமுக அரசு. உடனடியாக சட்டப்பேரவையிலும் அதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. ஆளுநரும் உடனடியாக அதற்கு ஒப்புதல் கொடுத்ததால் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் தேர்தல் பிரச்சார சமயங்களில் வன்னியர்களுக்கு அதிமுக அரசு கொடுத்துள்ள தனி இடஒதுக்கீட்டை விமர்சித்த மு.க.ஸ்டாலின் பேசி வந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்னியர்களுக்கு நியாயமான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அவர் கூறி வந்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக அரசு கொண்டு வந்த வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு ஒப்புதல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிவிக்கையே வெளியிட்டார். இதனை தொடர்ந்து பாமக எம்எல்ஏக்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தனர். இந்த நிலையில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையும் ராமதாஸ் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு அறிவிப்புகளுமே வட மாவட்டங்களில் வன்னியர்களை குறி வைத்து திமுக அரசு மேற்கொண்டவை ஆகும்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும். இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கடந்த தேர்தலில் இந்த மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வாக்குகுள் கிடைக்கவில்லை. அதிமுக – பாமக கூட்டணியால் வன்னியர்களின் வாக்கு கணிசமாக திமுகவிற்கு வந்து சேரவில்லை. இதனை சரி செய்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கவே ஸ்டாலின் வட மாவட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்கிறார்கள்.
இதே போல் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி மாற்றத்திற்கு பாமக ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அதிமுக கூட்டணியை காட்டிலும் திமுக கூட்டணி பயனுள்ளதாக இருக்கும் என்று ராமதாஸ் கருதுகிறார். இதே போல் திமுகவும் கூட வட மாவட்டங்களில் அதிமுகவை எதிர்கொள்ள பாமக போன்ற பலமான கட்சி அவசியம் என்று கருதலாம் என்கிறார்கள். இதனால் தான் பாமகவை கூட்டணிக்கு கொண்டு வரும் விதமாக அக்கட்சியின் கோரிக்கைகள் என்று கூறப்படுவதை நிறைவேற்றி வருவதாகவும் இந்த காரணத்தினால் திமுக – பாமகவுடன் நெருங்குவதாகவும், பாமக கூட்டணிக்கு தயாராகி வருவதாகவும் பேசப்படுகிறது.