உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்கிற முடிவில் அதிமுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அதிமுகவிற்கு படுதோல்வி கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

கடந்த புதன் அன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்துதான் அதிகம் பேசப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க வேண்டும் என்றால் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முக்கியக் கருத்தாக இருந்து உள்ளது. 

இன்றைய கூட்டத்தில் யாரும் பேச அனுமதிக்கப் படவில்லை என்றாலும் கூட அதன் பிறகு பலரும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசி வருகின்றனர். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற கருத்தையே அனைவரும் முன்வைத்து வருவதாகச் சொல்கின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு வாரி வழங்கியது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வாரி வழங்கினால் அதனை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதுதான் எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வத்திற்கு வந்து கொண்டிருக்கும் தகவலாக இருக்கிறது. மேலும் பாஜகவுடனான கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்றும் அதிமுக மேலிடத்திற்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். 

இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய வியூகம் வகுப்பது குறித்து அதிமுக மேலிடம் விரைவில் கூட்டத்தை கூட்டம் என்கிறார்கள். ஆனால் பாஜகவை ஒதுக்கிவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் களம் காண முடியாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.