கொடைக்கானலில் உள்ள மசாஸ் சென்டரில் போதிய வருமானம் இல்லாததால் விரக்தியில் இருந்த  கேரளாவை சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கேரளாவை சேர்ந்த மேரி(24) மற்றும் சுபிஸ்(35) ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பாக்கியபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். 

மேலும்  தனியார் விடுதிகளில் மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ள‌னர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட நாள் முதலே  சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. இதனால்  மசாஜ் சென்டரில் போதிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் சுபிஸ் தினந்தோறும் குடித்து வந்ததால் அடிக்கடி  இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கப்பக்கத்தினரால் கூற‌ப்ப‌டுகின்ற‌து. மேரி அன்றாட உணவு பொருட்கள் வாங்குவதற்க்கு கூட போதிய பணம் இல்லாததால் தவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அப்பகுதி மக்கள்தெரிவிக்கின்றனர். 

அப்ப‌குதி மக்கள் கொடைக்கானல் காவல் துறைக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேரியின் ச‌ட‌ல‌த்தினை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உடன் தங்கியிருந்த சுபிஸ்க்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது போலீசார் நடத்திய முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது கொலையா அல்ல‌து த‌ற்கொலையா என்ற‌ கோண‌த்தில் சுபிஸிடம்  போலீசார் தீவிர விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்றன‌ர்.