பட்டியலினத்தவர்கள் நீதிபதியாவது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை. மறுக்கப்பட்ட உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நீதிமன்றத்தில் பட்டியலினத்தவர் நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை என சர்ச்சையாக பேசி இருந்தார். அதற்கு இப்போது விளக்கமளித்துள்ளார் திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தேசம் காப்போம் என்ற பேரணி திருச்சியில் நடைபெற்றது. பேரணியின் நிறைவில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி. ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திடக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய திருமாவளவன், ’பட்டியலினத்தவர்கள் நீதிபதியாவது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை. மறுக்கப்பட்ட உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கும்.திருமாவளவன், 70 வயதுவரை நடித்து முடித்தவர்களே ஆட்சிக்கு வரவிரும்பும்போது விடுதலைச் சிறுத்தைகள் ஆட்சிக்கு வரக்கூடாதா? அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அடுத்த மாதம் நடத்தும் பேரணியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்’’என அவர் தெரிவித்தார்.