letter to om
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் உட்பட 26 மீனவர்களையும், 131 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு,.எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து இயந்திரப் படகு மூலம் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இயந்திரப் படகு மூலம் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்களும் இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் விரிகுடா கடல்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை இவ்வாறு செய்வதை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது - எனவே, இந்தப் பிரச்னையை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சிறைபிடிக்கப்பட்டிருக்கும் 16 மீனவர்கள் மற்றும் 2 இயந்திரப் படகுகள் உட்பட இலங்கை வசமுள்ள 26 மீனவர்கள் மற்றும் 131 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்னையை வெளியுறவு அமைச்சகம் மூலம் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
