இதில் கூடவா அரசியல் பார்ப்பீங்க..? புள்ளி விவரத்தோடு மோடி அரசை விளாசிய கே.எஸ்.அழகிரி.!
மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில்கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கடுமையான கண்டனத்திற்குரியது. கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், தமிழகத்திற்குத் தடுப்பூசி விநியோகம் செய்வதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 985 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 25.9 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 5.2 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால், பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 கோடியே 72 லட்சம் பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 2 கோடியே 39 லட்சம் பேருக்கும், குஜராத்தில் 2 கோடியே 79 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கிற கரோனா தடுப்பூசியைவிடப் பலமடங்கு தடுப்பூசிகளை, பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு விநியோகம் செய்கிறது. மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில்கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கடுமையான கண்டனத்திற்குரியது. கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.