Lets emphasize Sasikala to connect the split teams

பரோலில் வந்த சசிகலாவிடம் நாளை அல்லது நாளை மறுநாள் சந்திக்க உள்ளதாக தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார். மேலும் பிரிந்த அணிகளை இணைக்க அவரிடம் வலியுறுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக் குறைவு காரணமாக தாம்பரம் அடுத்துள்ள மேடவாக்கம் அருகே குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல், சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று சிறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் அளித்தது. சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த நிலையில் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. சசிகலாவுக்கு சில நிபந்தனைகளையும் சிறை நிர்வாகம் விதித்தது.

பரோலில் வெளிவந்த அவர், இன்று, தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் அருகே உள்ள குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா சென்றார். அங்கு மருத்துவமனை பெற்று வரும் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த நிலையில், சசிகலாவுக்கு பரோல் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்று தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார். காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை அல்லது நாளை மறுநாள் கருணாஸ், தமிமுன் அன்சாரியுடன் தானும் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறினார்.

அப்போது, பிரிந்த அணிகளை இணைப்பது குறித்து தாங்கள் வலியுறுத்துவோம் என்றார். மேலும், பாஜகவின் பிடியில் இருந்தும், அச்சுறுத்தல்களில் இருந்தும் அதிமுக அணிகள் விடுபட வேண்டும் எனவும் தனியரசு எம்எல்ஏ கூறினார்.