இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் என்ற கொள்கையை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வோம். தமிழக மீனவர்களின் பிரச்னை தீர்க்கப்பட வேண்டுமென்றால், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு. இந்து மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம். அரசியலிலிருந்து ரஜினி பின்வாங்கி இருக்கலாம். அதற்காக நாங்கள் ஒரு காலத்திலும் பின்வாங்கிவிட மாட்டோம். ஆன்மிக அரசியலுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பார்.
தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டுவங்கி என்கிற அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். அதே சமயம் பெரும்பான்மை இந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது வேலை கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் நாடகமாடி மக்களிடம் ஓட்டு வாங்க நினைக்கிறார். இந்த இரட்டைவேடம் ஒரு போதும் எடுபடாது.” என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.