சென்னையில் திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை மண்டலங்கள் சவாலான பகுதிகளாக உள்ளது கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா தடுப்புப்பணிக்காக சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வீடு வீடாக கிருமிநாசினி தெளிக்கும் பணி போக்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனா தொற்று இல்லை என மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார். 

முக்கியமாக முதியோர்கள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற அச்சமும் வேண்டாம், கவனகுறையும் வேண்டாம். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்துறையினர் சிறப்பாக செயல்படுகின்றனர். முகக்கவசத்தை எடுத்துவிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். சிறு வணிகளர்கள், டெலிவிரி பாய்ஸ் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும். சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன என்றார்.