நிச்சயம் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்றும் அப்போது ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அறிவாலயம் என அனைத்தையும் ஒரு கை பார்ப்போம் என முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

நிச்சயம் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்றும் அப்போது ஸ்டாலினையும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அறிவாலயம் என அனைத்தையும் ஒரு கை பார்ப்போம் என முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தை சூறையாடியது ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்றும், திமுகவும், காவல்துறையில் தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஓ பன்னீர்செல்வம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார், ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர், இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சென்ற ஓ. பன்னீர்செல்வம் அலுவலகத்தில் கதவை உடைத்து, ஆவணங்களை அள்ளிச் சென்றார், இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை விமர்சித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் வீட்டு வரி குடிநீர் வரியை சொத்து வரி உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்திருந்தார். அதன்படி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி தலைமை வகித்தார், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் அதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கடந்த ஓராண்டாக ஸ்டாலின் அரசு தடுமாற்றம் கண்டுவருகிறது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது, அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு கூட பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது, ஆனால் தமிழக அரசு இன்னும் குறைக்கவில்லை, இந்த ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே பாலம் கட்ட தொடங்கிவிடுவார்கள், ஏனென்றால் இங்கு உள்ள சிமெண்ட் ஆலைகள் அனைத்தும் திமுகவினருக்கு சொந்தமானது, ஒரு டன் கம்பி 35 ஆயிரம் ரூபாய் விற்கப்பட்டது ஆனால் தற்போது 85 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது, சிமெண்ட் 225 க்கு விற்றது, ஆனால் இப்போது 525 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஸ்டாலின் மிகப் பெரிய அரசியல் தவறு செய்துவிட்டார், ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடவில்லை, உண்மையிலேயே அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியது ஸ்டாலின் அரசின் காவல்துறைதான், பன்னீர்செல்வத்தை கைக்கூலியாக வைத்துக்கொண்டு ஸ்டாலின் போலீஸ் துணையோடு அதிமுக அலுவலகத்தை சீல் வைத்துள்ளனர். ஸ்டாலின் அவர்களே விரைவில் காலம் மாறும், அப்போது நீங்கள் அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும், அதிமுக ஆட்சிக்கு வரும் அப்போது உங்களையும் பார்ப்போம், உங்கள் மகனையும் பார்ப்போம், அண்ணா அறிவாலயத்தில் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:  பள்ளி கூடத்தில் வழிபாடு, 'யோகா' 'ஷாகா' நடத்தக் அனுமதிக்க கூடாது.. பள்ளிக் கல்வித் துறைக்கு கி.வீரமணி அட்வைஸ்.

அதிமுகவில் உள்ள தொண்டர்கள் பன்னீர்செல்வத்தை போல பச்சோந்திகள் இல்லை, ஓ.பன்னீர்செல்வம் அவர்களே நீங்கள் செய்த துரோகத்தை ஒரு நாளும் மறக்க மாட்டோம், ஓ பன்னீர் செல்வத்தை வைத்துக்கொண்டு கலவரம் செய்யலாம், கட்சியை அழித்துவிடலாம் என நினைக்காதீர்கள், ஓ பன்னீர் செல்வத்தை தயவுசெய்து நம்பாதீர்கள், அவர் சுயநலத்திற்காக எதையும் யாரையும் பலி கொடுக்க தயங்க மாட்டார். இவ்வாறு சிவி சண்முகம் ஆவேசமாக கூறினார்.