கடந்த 2016ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட குறைவான வாக்குகளே தேர்தலில் பதிவாகியிருப்பது ஆளும் அதிமுகவிற்கு சாதகமான விஷய என்று பேசப்படுகிறது.

234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஒட்டு மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இது கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் குறைவான வாக்குப்பதிவு தான். அதே சமயம் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள பதிவாகியிருந்தன. அதை ஒப்பிடும் போது இந்த தேர்தலில் சுமார் 3 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. இது வாக்காளர்கள் இடையே இந்த தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் குறைந்திருப்பதை காட்டுகிறது. பொதுவாக மக்களுக்கு ஆளும் அரசின் மீது அதிருப்தி இருந்தால் அதனை வெளிப்படுத்த அதிக அளவில் வாக்களிக்க வருவார்கள் என்பது ஒரு லாஜிக்.

உதாரணமாக கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சி மீது மிக கடுமையான அதிருப்தி இருந்தது. இதனால் 1996ம் ஆண்டு தேர்தலில் அதிக அளவில் வாக்குகள் பதிவான நிலையில் எதிர்கட்சியாக இருந்த திமுக கூட்டணி மிக அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதே போல கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக அரசின் மீதும் மக்களுக்கு மிகக்கடுமையான அதிருப்தி இருந்தது. இந்த அதிருப்தியால் 2006ம் ஆண்டு பதிவான வாக்குகுளை காட்டிலும் 2011ல் அதிக வாக்ககுள் பதிவாகின. எதிர்கட்சியாக இருந்த அதிமுக ஆட்சியை கைப்பற்றியது.

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே சமயம் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் 74 புள்ளி 81 சதவீதமாக குறைந்தது. வாக்குப்பதிவு சதவீதம் சுமார் ஒரு விழுக்காடு மட்டுமே குறைந்த நிலையில் அதிமுக மறுபடியும் வென்று ஆட்சியை பிடித்தது. அதாவது 2011ம் ஆண்டு முதல் 2016 வரையிலான ஜெயலலிதா அரசு மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை. இதனால் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இது ஆளும் அதிமுகவிற்கு சாதகமாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதே லாஜிக்படி பார்த்தால் கடந்த 2016ஐ விட தற்போது சுமார் 3 சதவீதம் அளவிற்கு வாக்குகள் குறைந்துள்ளது.

இதன் மூலம் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாதது தெரியவந்துள்ளது. பொதுவாக அரசுகள் மிது அதிருப்தி இல்லை, புதிய அரசை தேர்வு செய்ய ஆர்வம் இல்லை போன்ற காரணங்கள் வாக்கு சதவீதம் குறைய காரணமாக இருக்கும் என்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் வாக்கு சதவீதம் குறைவு என்பது ஆளும் அதிமுகவிற்கு மன நிம்மதியை கொடுக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் கொரோனா அதி தீவிரமாக பரவுவது, கோடை வெயில் தற்போது முதலே கொளுத்துவது போன்ற காரணங்களால் இயல்பாகவே வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என்பதால் இதற்கும் தேர்தல் லாஜிக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று திமுக தரப்பு விளக்கம் அளிக்கிறது.

ஆனால் கடந்த 2015ம் ஆண்டு பீகார் தேர்தலில் பதிவான அதே அளவிலான வாக்கு கடந்த 2020ம் ஆண்டும் பதிவாகியிருந்தது. இத்தனைக்கும் பீகாரில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது கொரோனா உச்சத்தில் இருந்தது. எனவே கொரோனாவுக்கும் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதற்கும் தொடர்பு இருக்காது என்கிறார்கள்.