அண்ணா, க.அன்பழகன் வகித்த பதவியை துரைமுருகன் தற்போது வகிப்பது பெருமை என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- இன்னும் 8 மாதங்களில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆளும் கட்சியாக மாறும். நான் திமுக தலைவராக உள்ளபோது பொதுச்செயலாளராக துரைமுருகன் இருப்பது பெருமை படுகிறேன். துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி அடைவார்.  துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை. 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார் துரைமுருகன். பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் என்றார்.

மு.க.ஸ்டாலின் தன்னை புகழ்ந்து பேசியதை கேட்டு பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து, டி.ஆர்.பாலு குறித்து ஸ்டாலின் பேசுகையில்;- வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் ஒருவர்’ என கருணாநிதியால் பாராட்டப்பட்டப் பெற்றவர் டி.ஆர்.பாலு. 3 முறை மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் டி.ஆர்.பாலு. துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் மிசா காலத்தில் சிறைக்கு சென்றவர்கள்.

டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி., 3 முறை மத்திய அமைச்சராக இருந்தவர். கருணாநிதிக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு. மறைந்த தலைவர் கருணாநிதி வகித்த பொறுப்பு டி.ஆர்.பாலுவின் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது. அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்கு பயன்படட்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.