சட்டப்பேரவைக்குள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் சம்பவம் அக்கட்சி வட்டாரத்திற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர் பாபு பேசிக் கொண்டிருந்தார். சேகர் பாபு அ.தி.மு.க அரசை விமர்சிக்கும் போதெல்லாம் அமைச்சர்கள் எழுந்து பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அவரும் விடாமல் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தார். இப்படியாக சேகர் பாபு பேச ஆரம்பித்து சுமார் 50 நிமிடங்கள் கடந்தது

.இதனால் சேகர் பாபுவை உடனடியாக பேச்சை முடிக்குமாறு சபாநாயகர் கூறினார். ஆனால் தான் இன்னும் பேச வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்தார். அப்படி என்றால் மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பேச வாய்ப்பு கிடையாது, அவர்கள் நேரத்தில் நீங்கள் பேசிக் கொள்ளலாம், அதற்கு உங்கள் கொறடா அனுமதி தேவை என்று சபாநாயகர் தெரிவித்தார். எங்கள் கொறடா ஒன்றும் சொல்லமாட்டார் நான் தொடர்ந்து பேசுகிறேன் என்று சேகர் பாபு பேசினார்.ஆனால் தாம்பரம் எம்.எல்.ஏ. ராஜா, எழும்பூர் ரவிச்சந்திரன் பேச வேண்டி உள்ளதால் சேகர் பாபு பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்று தி.மு.க கொறடா சக்கரபாணி கேட்டுக் கொண்டார். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சேகர் பாபு தொடர்ந்து பேசினார். அப்போது தாம்பரம் ராஜா, மற்றும் எழும்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து சேகர் பாபுவை பேச்சை முடிக்குமாறு கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் பாபு அவர்கள் இருவரையும் நோக்கி ஒருமையில் ஏதோ கூறினார்.இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவர்களை அமைதிப்படுத்தினர். அப்போது சேகர் பாபு கொறடா சக்கரபாணியை பார்த்து முறைத்துக் கொண்டே அமர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்த சட்டப்பேரவை முடிந்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிக் கொண்டிருந்த போது லாபியில் வைத்து சேகர் பாபு –சக்கரபாணி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சேகர் பாபு நான் உனக்கு முன்னால் இருந்தே தி.மு.க.வில் இருக்கிறேன், பேசும் போது பார்த்து பேசு என்று சக்கரபாணி எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். அப்போது தனது தவறை உணர்ந்த சேகர்பாபு உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சட்டப்பேரவையில் சேகர் பாபு நடந்து கொண்ட விதம் குறித்து ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.