Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சியால் மரண பயம்.. அராஜகம் செய்த MLA மீது சட்ட நடவடிக்கை தேவை.. முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் OPS

 திமுகவினர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும் தாக்குவதும் தொடர் கதையாக ஆகிவிட்டதால், இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பு சட்டம்-ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்டு.

Legal action is needed against anarchic DMK MLA KP Shankar... panneerselvam
Author
Tamil Nadu, First Published Jan 29, 2022, 10:19 AM IST

திமுகவினர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும் தாக்குவதும் தொடர் கதையாக ஆகிவிட்டதால், இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பு சட்டம்-ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்டு என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று தாங்கள் சொல்லும் நபர்களை களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று திமுகவினர் அதிகாரிகளை மிரட்டியது, தடுப்பூசி முகாம்களிலும், நியாய விலைக் கடைகளில் டோக்கன் விநியோகிப்பதிலும், திமுகவினரின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்த காவல் துறையினரை மிரட்டியது, புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியம் பகுதியில் மணல் கடத்தி வந்த லாரியை பிடிக்க முயற்சித்த கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரை கொல்ல முயற்சித்தது என்ற வரிசையில் தற்போது சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளர் திருவெற்றியூர் திமுக எம்எல்ஏ சங்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

Legal action is needed against anarchic DMK MLA KP Shankar... panneerselvam

இந்தச் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, அரசுப் பணிகளில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றிற்கு முற்றிலும் முரணான ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, ஜனநாயகத்திற்கு புறம்பான ஆட்சி, சட்ட விரோத ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பல சாலைகளை அமைக்கும் பொருட்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் ஓர் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், நடராஜன் தோட்டம் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு ஆகியவற்றில் முப்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு மேற்கொண்டிருந்த நிலையில், திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் மற்றும் அவரது ஆட்கள் அங்கு சென்று அந்தப் பணியை நிறுத்தச் சொன்னதாகவும், இதைத் தீர்த்து வைக்க சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் முயன்றபோது எம்எல்ஏ சங்கர் மற்றும் அவரது ஆட்கள் உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளரை தாக்கியுள்ளதாகவும், சாலைப் பணிகளுக்காக 13 லாரிகளில் நிறுத்தப்பட்டிருந்த கலவை திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு எம்எல்ஏ உதவிப் பொறியாளரிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், இதில் மன உளைச்சலுக்குக் காரணமான உதவிப் பொறியாளர் விடுப்பில் சென்றுவிட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

Legal action is needed against anarchic DMK MLA KP Shankar... panneerselvam

இது குறித்து எம்எல்ஏ-விடம் கேட்டபோது, உதவிப் பொறியாளரை யாரும் தாக்கவில்லை என்றும், சாலைப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவலின் அடிப்படையில் அவரது ஆட்கள் சாலைப் பணிகள் மேற்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றதாகவும், தான் அங்கு இல்லை என்றும், லஞ்சம், தரவு குறித்த புகார்களில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த வடக்கு மண்டல துணை ஆணையர், ஏதோ பிரச்சனை தொடர்பாக வாய்மொழி புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், பொறியாளர் தாக்கப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து காவல் துறையிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என்று ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் கேட்டபோது, நிறுவனத்தின் எதிர்காலப் பணிகள் பாதிக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியே இதுகுறித்து மவுனம் சாதிக்கிறது என்றும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தாக்கப்பட்டதால் அவர்கள் தான் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

Legal action is needed against anarchic DMK MLA KP Shankar... panneerselvam

ஆக மொத்தம், மாநகராட்சி அதிகாரி, காவல் துறையினர், ஒப்பந்ததாரர் என அனைவரும் மரண பயத்தில் உள்ளனர். "சட்டமுறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், தான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன்" என்றும் உறுதி மொழி எடுத்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரியை தாக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் செயல்பட்டு இருக்கிறார். சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் உதவியாளர் மீதான எம்எல்ஏ-வின் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல தன்னலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் அரசு அதிகாரிகள் திமுக-வினராலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஆங்காங்கே மிரட்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் உறுதியாகி நிலைத்து விட்டது. திமுக-வினரும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஒப்பந்தங்களில் தலையிடுவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது.

சாலைப் பணிகளை நிறுத்தச் சொல்ல சட்டமன்ற உறுப்பினருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும், எதற்காக பணிகளை அவர் நிறுத்தச் சொன்னார் என்பதையும், சாலைப் பணிகள் நடக்கும் இடத்தில் திமுக-வினருக்கு என்ன வேலை என்பதையும், அரசு அதிகாரியை தாக்கும் அளவிற்கு நள்ளிரவில் என்ன நடந்தது என்பதையும் தீர விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசிற்கு உண்டு. திமுகவினர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும் தாக்குவதும் தொடர் கதையாக ஆகிவிட்டதால், இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய பொறுப்பு சட்டம்-ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதல்வருக்கு உண்டு.

Legal action is needed against anarchic DMK MLA KP Shankar... panneerselvam

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற்படி சாலைப் பணிகள் மேற்கொண்டபோது திமுக-வினரும், சட்டமன்ற உறுப்பினரும் ஏன் அங்கு வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? ஒப்பந்ததாரரிடம் என்ன பேரம் பேசப்பட்டது? ஏன் இது குறித்து யாரும் எந்தப் புகாரும் தரவில்லை? என்பதையெல்லாம் தீர விசாரித்து, அரசு அதிகாரியைத் தாக்கிய திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் மற்றும் அங்கு வந்த திமுக-வினைரை சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios