சென்னை மெரினா கடற்கரை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி 5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

 

சென்னை மெரினா கடற்கரையில் உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரம் செய்வதற்கான கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க டிசம்பர்-26 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 37-சி யின்படி  வழங்க வேண்டும். 

ஆனால் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுகுறித்து எதுவும்  குறிப்பிடப்படவில்லை, எனவே மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பூர்வ உரிமைகளின் படி சென்னை மாநகராட்சி வழங்க உரிய உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.