நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் மண்ணைக் கவ்விய நிலையில், மேற்கு வங்கத் தேர்தலில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸுடன் அக்கட்சி கைகோர்த்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி செய்தன. ஆனால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளால் இரு கட்சிகளாலும் கூட்டணி அமைக்க முடியவில்லை. தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளையும் பாஜக 18 தொகுதிகளையும் காங்கிரஸ் 2 தொகுதிகளையும் வென்றன. மேற்கு வங்காளத்தில் அசைக்க முடியாத கட்சியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஒரு சீட்டைக்கூடப் பிடிக்க முடியாமல் பரிதாபமாகத் தோற்றுபோனது.
மேலும் மாநிலத்தில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது மட்டும் அல்லாமல், அந்த மாநிலத்தில் தன்னுடைய வாக்கு வங்கியையும் உயர்த்தியுள்ளது. இது இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கவும் வாக்குகளை ஒருங்கிணைக்கவும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.


காலியாக உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு செய்துள்ளன. “திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை தோற்கடிப்பதற்காக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.  இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்'' என மேற்கு வங்காளா காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தெரிவித்துள்ளார்.