தமிழக அமைச்சர்களுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் இடையே நடந்து வரும் பனிப்போரின் உச்சக்கட்டமாக,’ ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக அமைச்சர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்புகிறார்கள்’ என்று அதிர்ச்சிகரமாகப் பேசியுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் நடக்கும் குளறுபடிகளை அடுத்து அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான மோதல்போக்கு அதிகரித்துவருகிறது. சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ’’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு சந்தேகத்திற்கு இடமானதே. இந்த விவகாரத்தில் பலர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்காக அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, ஜெயலலிதா மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களில் என்ன நடந்தது? 

அங்கு ரூ.1 கோடியே 17 லட்சத்திற்கு யார் இட்லி, தோசை சாப்பிட்டது? இந்த விவகாரத்தில் தற்போதைய ஆணையத்தின் வழக்கறிஞர், முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன் ராவ், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்க்க மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு ஏன் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கவில்லை என்ற கேள்விக்கு, இந்தியாவின் கௌரவம் குறித்து ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். நோயாளியை காப்பாற்றுவது முக்கியா? கௌரவம் முக்கியா? என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

அவரது பேச்சுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும் ‘அதிகாரிகளுக்கு சரியான ‘ட்ரீட்மெண்ட்’ கொடுத்து உண்மைகளை வரவழைக்கவேண்டும் என்று இன்னும் கடுமையான அதிர்ச்சி அளித்தார்.

இது அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை உண்டாக்கியது. இந்நிலையில் மீண்டும் அதிகாரிகளை உசுப்பேற்றும் விதமாக ‘அவர்கள் எங்களைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்’ என்கிறார் சி.வி.சண்முகம்.

எம்.ஜி.ஆர், கருணாநிதி காலம் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் மந்திரிகளின் காலடிச்சுவட்டில் சேவை செய்து வந்தவர்கள் என்ற நிலை மாறி தற்போது மந்திரிகளையே மிரட்டும் நிலைக்கு வந்திருப்பதை என்னவென்று சொல்ல?