மெழுகுவர்த்தி போல திமுக ஆட்சி உருக்குலையும்.. கேட்டால் திராவிட மாடல்.? அண்ணாமலை ஆவேசம்
திமுக நிர்வாகிகளால் அடித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் உதவி தொகை அளிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக ராணுவ வீரர் பாபு திமுக நிர்வாகியால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை வைத்து திமுகவை கடுமையாக பாஜக விமர்சித்து வந்தது. பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி தடா பெரியசாமி வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை.
சென்னை சிவானந்த சாலையில் இன்று காலை 9:30 மணியளவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டமும், மாலை 4 மணியளவில் மெழுவர்த்தி ஏந்தி அண்ணாமலை தலைமையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை எதிரிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை தலைமையில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அண்ணாமலை, எங்களின் பட்டியலின பிரிவுத் தலைவர் காரை அடித்து உடைத்ததற்காக வருத்தப்படப்போகும் ஆள் நான் இல்லை. கட்சி நிதியில் இருந்து சேதம் அடைந்த கார் சரிசெய்து தரப்படும்.
இதையும் படிங்க..அதெல்லாம் பழசு, இது ஈரோடு பார்முலா..! கமல் ஹாசன் கால்ஷீட் எவ்வளவு.? பங்கமாக கலாய்த்த செல்லூர் ராஜு
மீண்டும் காரை உடைத்தால் கட்சியின் சார்பில் புது கார் வாங்கித் தரப்படும். புதிய காரை உடைத்தால் ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுப்போம். நாங்கள் பயப்படும் கட்சி அல்ல. இது தேசியக் கட்சி. கடுமையாக, தைரியமாக அரசியல் பணியை செய்ய வேண்டும். இந்தக் கட்சி உங்களை பாதுகாக்கும்.
திமுக நிர்வாகிகளால் அடித்து கொல்லப்பட்ட ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என்றும், பிள்ளைகள் படிப்பு செலவுஏற்கப்படும் என்றும் கூறினார். உத்தர பிரதேசத்தில் ஒரு குரங்கிற்கு வயிறு சரி இல்லாமல் போயிருக்கும்.
அந்த குரங்கிற்கு வயிறு சரியில்லாமல் போனதற்கு யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று மெழுகுவர்த்தியை தூக்கிக் கொண்டு குறுக்கவும் மறுக்கவும் ஓடுவார்கள். இன்றைக்கு அந்த கும்பல் எங்கே சென்றது. மெழுகுவர்த்தி போல உங்க ஆட்சி எரிந்து கொண்டு இருக்கிறது. அது உங்களை உணர்த்துவதற்காகத்தான். மெழுகுவர்த்தி எப்படி எரிந்து உருக்குலைந்துபோகிறதோ அதேபோல்தான் உங்கள் ஆட்சியும் என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
2024-ல் முழுமையாக எரிகிறதா ? 2026-ல் முழுமையாக எரிகிறதா என்பதை காலமும் அரசும் ஜனாதிபதியும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் இப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு பிரச்சினை சென்று கொண்டிருந்தால் எப்படி அரசை நடத்துவீர்கள். 238 பூத்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளது. 238 பட்டிகள் போடப்பட்டுள்ளது.
அந்த பட்டிகளுக்குள் நம்மை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் யாரும் அவர்களை பார்த்து பிரசாரம் செய்யக்கூடாது என ஒரு நாளைக்கு ஆயிரம் கொடுத்து இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள். பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் கூட இப்படி மனிதப்பட்டிகள் கிடையாது. கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள். வெட்கமாக இல்லையா உங்களுக்கு ? என்று ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார் அண்ணாமலை.
இதையும் படிங்க..“நான் அவள் இல்லை” கதறி அழுத கணவன்.! கில்லாடி மனைவி - திருமணத்துக்கு பெண் பார்ப்பவர்களே உஷார்..!