தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை முறையான பாதுகாத்து வருகிறோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க இன்னும் கால தாமதம் ஆகுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கவேண்டும் என்று பல கல்லூரி நிர்வாகிகளும் பள்ளிகளை நடத்தும்  நிர்வாகத்தினரும் எங்களுக்கு கோரிக்கை வைத்தார்கள். 

அதே வழியில் பெற்றோர்களும் பள்ளிகள் மூடி நீண்ட காலம் ஆகிவிட்டது,  இறுதி தேர்வுக்கு இன்னும்  குறுகிய காலம் தான் இருக்கிறது. எனவே மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படும், தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் கல்லூரிகளையும் பள்ளிகளையும் திறக்க வேண்டுமென பெற்றோர்கள் வைத்த கோரிக்கை அரசின் கவனத்திற்கு வந்தது. அதனடிப்படையில், பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை  நாங்கள் வெளியிட்டோம். இருந்தாலும் ஊடகம் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாக சிலர் இப்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதையும் அரசு கவனமாக எடுத்துக்கொண்டு பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தினை அனைத்து பள்ளிகளிலும் கூட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு, அக்கருத்துக்களின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். 

விமர்சனம் என்ற பெயரில் அவதூறு ஏற்படுத்தும் விதமாக போஸ்டர் ஒட்டுகிறார்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களைப் பொறுத்தவரை  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி அம்மாவின் உடைய காலத்திலும், நான் இப்பொழுது முதலமைச்சராகப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலமாக போகிறது இந்த காலக்கட்டத்திலும் அரசு முறையான சட்டஒழுங்கை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.