தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றோரு நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 அன்று தேர்தல் முடிவடைந்தது. நீதிமன்ற வழக்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் கனகராஜ் மறைவால் காலியான சூலூர் தொகுதிக்கும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம்.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில், திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. பிற அரசியல் கட்சிகளும் சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் பெறுவது இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மே 1 அரசு விடுமுறை என்பதால், வேட்பு மனுக்களை திரும்ப பெற மே 2 வரை அவகாசம் உள்ளது. அன்றைய தினம் இந்த 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரியவரும். பிரசாரத்துக்கு பிறகு மே 19 அன்று 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும். இந்தத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் ஏற்கனவே 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளும் மே 23 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.